ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

 

அப்துந் நாசிர்

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

 

 

ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும், மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.

இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள்.

மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்

இணை கற்பிப்பவர்களின் பண்பு

 

இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்

அல்குர்ஆன் 41:6, 7

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற ஒருவன் தான் ஸகாத்தை நிறைவேற்ற மாட்டான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கலாமா? ஒரு போதும் இருக்கக் கூடாது. உண்மையான முஸ்லிம்கள் ஸகாத்தை முறையாக நிறைவேற்றி விடுவார்கள்

மறுமையில் நஷ்டவாளிகள்

 

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது அவர்களிடம் நான் போய்ச் சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் "கஅபாவின் அதிபதி மீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன்

என்னால் இருப்புக் கொள்ள முடியாததால் உடனே எழுந்து, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர'' என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, "ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததை விடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்'' என்று கூறினார்கள்

நூல்கள்: புகாரி (6638), முஸ்லிம் (1809

சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி (1408

பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும்

 

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்

அல்குர்ஆன் 9:34

தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது'' என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை'' என்று விளக்கமளித்தார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி )
நூல்: அபூதாவூத் (1417 )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நூல்: முஸ்லிம் (1803 )

அல்லாஹ் மறுமை நாளில் மக்களை மஹ்ஷர் மைதானத்தில் ஒன்று கூட்டுவான். மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். ஸகாத் வழங்காதவனுக்குக் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவனுடைய செல்வங்கள் பழுக்கக் காய்ச்சி அவனுக்கு சூடு போடப்படும் .


அல்லாஹ் ஸகாத் வழங்காதவனிடம் கேள்வி கணக்குக் கேட்பதற்கு இரண்டு நாட்கள் தாமதமாக்கினால் ஒரு லட்சம் வருடங்களாகி விடும். அது வரை அவனுக்கு இந்த வேதனை தான். ஆனால் எத்தனை நாட்கள் தாமதமாக்கி நம்மிடம் கேள்வி கேட்பான் என்று நாம் உறுதியாகக் கூற முடியுமா? இதனை எண்ணிப் பார்க்கும் போது நம்முடைய உள்ளம் பதறுகிறது. அல்லாஹ் இந்த வேதனையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய செல்வத்திற்கான ஸகாத்தை நாம் வழங்கி விட வேண்டும் .


ஸகாத் வழங்காதவர் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவருக்கு மஹ்ஷர் மைதானத்தில் வேதனை நடைபெறும். இவ்வாறே கால்நடைகளுக்கான ஸகாத்தை வழங்காவதர்களுக்கும் மஹ்ஷர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை வேதனை செய்யப்படும். பிறகு அவனிடம் கேள்வி கணக்கு கேட்ட பிறகு அவனுக்கு சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ தீர்ப்பளிக்கப்படும் என நபியவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கூறியுள்ளார்கள் .

இதிலிருந்து ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்றாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம் தான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

கழுத்து நெரிக்கப்படுதல்

 

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் .

அல்குர்ஆன் 3:180

இவ்வசனம் ஸகாத் வழங்காதவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் .

பாம்பாக மாறும் செல்வம்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம், கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் தான் உனது செல்வம்; நான் தான் உனது கருவூலம்' என்று சொல்லும் இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.''  எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: புகாரி (1403 )

பாம்பின் வாயினால் கடிபடுதல்

 

"(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்'' என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று  அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும் .

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி )
நூல்: முஸ்லிம் (1807 )

நரகத்தின் காப்புகள்

 

யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தன்னுடைய மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவளுடைய மகளின் கையில் கெட்டியான இரு தங்க வளையல்கள் இருந்தன. "இதற்குரிய ஸகாத்தை நீ நிறைவேற்றி விட்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள், இல்லை என்று கூறினாள். "இந்த இரண்டிற்கும் பகரமாக மறுமை நாளிலே நெருப்பாலான இரண்டு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு சந்தோசமளிக்குமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண் அந்த இரண்டையும் கழற்றினார். பிறகு அந்த இரண்டையும் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கினார். பிறகு, "இவையிரண்டும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்குமுரியது'' என்று கூறினார் .

அறிவிப்பவர்: அம்ரு பின் ஆஸ் (ரலி )
நூல்: நஸாயீ (2434 )

ஒட்டகத்திற்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

 

"அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும் - மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: முஸ்லிம் (1803 )

ஆடுகளுக்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

 

"அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்று விடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: முஸ்லிம் (1803 )

நபியவர்களின் உதவி இல்லை

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும் . மேலும் உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்) "முஹம்மதே' எனக் கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் . மேலும் யாரும் (மறுமை நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து "முஹம்மதே' எனக் கூற, அதற்கு நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று சொல்லும் படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் .''

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: புகாரி (1402 )

 

 

நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக !

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 210317